தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(18.7.2024) பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.264.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 12 ஆய்வகங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள், திருவண்ணாமலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துடன் இணைந்த ஒருங்கிணைந்த கல்வி வளாகம் போன்றவற்றை காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முன் ஏற்பாட்டுப் பணிகள் அந்தந்த பள்ளி வளாகங்களில் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் சட்டமன்றத் தொகுதி தேக்காட்டூர் பள்ளி திறப்பு விழாவில் அமைச்சர் ரகுபதியும், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி குழந்தை விநாயகர் கோட்டை அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டடம் திறப்பு விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் முதல்வரின் திறப்பு விழா நிகழ்வு ரத்தானது.
இதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். அப்போது, கட்டிடம் வெடித்து நின்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து கோவமடைந்த அமைச்சர் மெய்யநாதன், “இந்த கட்டிடம் கட்டிய எஞ்சினியர் யார், அவரை கூப்பிடுங்க” என்று ஆவேசமாகக் கேட்க, பவ்யமாக வந்து நின்றார் எஞ்சினியர், “இது என்ன வேலை தரையெல்லாம் பினிசிங் ஆகல, இப்படித்தான் வேலை பார்ப்பிங்களா?” என்று கோபமாகக் கேட்டதோடு அருகில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை கட்டிடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், லைட் எங்கே இருக்கு என்று கேட்க இன்னும் ஒயரிங் செய்யல என்று பதில் சொல்ல எதுவும் பேசமுடியாத கோபத்தில் அங்கிருந்து அகன்றார்.
மேலும் இன்று முதலமைச்சர் திறந்து வைக்க வேண்டிய அந்த பள்ளி கட்டடம் சுவர் முழுவதும் வெடித்தும், ஆங்காங்கே சிமெண்ட் பூச்சுகள் உடைந்து தொட்டால் கொட்டும் நிலையிலும் காணப்பட்டது. இது போன்ற கட்டடங்களைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தரம் ஆய்வு செய்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதலமைச்சர் கையால் திறப்பு விழா காண இருந்த பள்ளி வகுப்பறை கட்டடம் இப்படி மோசமாக உள்ளதை பாரத்து அமைச்சர் கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.