கடந்த 17 ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் இயல்பாக கூறிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
முப்பெரும் விழாவில் துரைமுருகன் பேசும்போது, “திமுக பிறந்ததற்கு வேலூர் காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் திமுக பிறந்திருக்காது. திமுக உருவாகி இருக்காது. திராவிடர் கழகமாக பெரியாரிடத்திலே பணியாற்றி இருந்தோம். பெரியார் எங்கள் ஊர் வேலூருக்கு வந்தார். மணியம்மையை பார்த்தார்.. கூட்டிகிட்டுப் போய்ட்டார்.. அவர் தொண்டு செய்ய வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின் தனக்குப் பிறந்த அந்த இயக்கத்தை நடத்துவதற்கு ஒரு அறிவுள்ள பெருமாட்டி கிடைத்தார் என்று அவரை திருமணம் செய்து கொண்டார். அண்ணா அவர்கள் இது பொருந்தா திருமணம் என்று அறிக்கை விட்டார். கழகத்தில் இருந்து வெளியேறினார். திமுக உருவானது. ஆக, வேலூரில் இருக்கிற மணியம்மை இல்லாவிட்டால், பெரியார் அவரை திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது” என்று பேசினார். இதனை சிலர் பெரியார் மணியம்மையை கூட்டிகிட்டுப் போய்ட்டார் என்று கூறியது மணியம்மை ஆதரவாளர்களை புண்படுத்திவிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். தேவையற்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துகொள்கிறேன். பெரியார் மணியம்மையை அழைத்துக்கொண்டு போனார் என்பதற்கு பதில் கூட்டிகொண்டு போனார் என பேசிவிட்டேன். இரு சொற்களுக்கும் இடையே மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன். தந்தை பெரியார், மணியம்மையார் மீது அடங்கா பற்றுக்கொண்டவர்களுக்கு என்பேச்சு வருத்தம் தந்திருக்கிறது. தந்தை பெரியார் இடத்தில் நான் எவ்வளவு கொள்கைப் பிடிப்பு கொண்டவன் என்பதை வீரமணி அறிவார்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.