கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72) காலமானார்.
காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்தின் முன் மலர்வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.மரியாதை செலுத்தும் முன் அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, வேளாண்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. துரைக்கண்ணு மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி எனக்கும், அ.தி.மு.க.வுக்கும், தமிழகத்துக்கும் பேரிழப்பாகும். அமைச்சர் துரைக்கண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது அமைச்சரவையிலும் வேளாண் அமைச்சராக திறம்பட பணியாற்றி மக்கள் நன்மதிப்பை பெற்றவர் துரைக்கண்ணு" என்றார்.
அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நல்லடக்கம் செய்தவற்காக அமைச்சர் உடல் சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம், ராஜகிரிக்கு புறப்பட்டது.