திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய்த்துறை சார்பில் ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டு மனைப் பட்டா மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட 112 பயனாளிகளுக்கு 44 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் புதிதாக பாலக்குறிச்சி ஊராட்சிக்கு 7 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் 17 ஊராட்சிகளுக்கு மொத்தம் 45 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 17 புதிய மின்சார ஆட்டோக்களையும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து அதன் பணிகளையும் அமைச்சர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, திருச்சி மன்ற உறுப்பினர் பயஸ் அகமது, மருங்காபுரி ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவக்குமார், திமுக மாவட்ட அவைத் தலைவர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், சின்னடைக்கன் மற்றும் வருவாய்த் துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.