திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வரையிலான வட்ட பேருந்து சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையம், இபி ரோடு, காந்தி மார்க்கெட், பாலகரை, மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை, உறையூர், மீண்டும் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்து அடைந்து சுற்று வட்ட பேருந்தாகச் செல்ல இருக்கிறது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மண்டல குழு தலைவரும், திமுக மாநகரக் செயலாளருமான மு.மதிவாணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலத்தின் பொது மேலாளர் அ.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் (வணிகம்) ஆர்.சாமிநாதன், கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், திமுக பகுதி கழகச் செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் மணிமேகலை, திமுக வட்டக்கழகச் செயலாளர் சங்கர், திமுக நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்து கோட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வர் ஆக்குவது குறித்து ஆதவ் அர்ஜீன் பேசிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து எனக் கட்சியின் மாநில நிர்வாகிகளே தெரிவித்து விட்டனர். எனவே இது குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி உள்ளேன் இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகும். வி.சி.க சார்பில் நடைபெறும் மதுவிலக்கு மாநாடு நல்ல நோக்கத்திற்காக நடத்தப்படக்கூடிய மாநாடு. மக்கள் விழிப்புணர்வுக்காக நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கலக்கக்கூடாது என விசிக தலைவரும் தெரிவித்துள்ளார் மதுவிலக்கு துறை அமைச்சரும் தெரிவித்துவிட்டார்” எனக் கூறினார்.