வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் மலையடிவார பகுதியில் கடந்த சில வாரங்களாக ஜே.சி.பி இயந்திரம் மூலம் மலையில் உள்ள பெரிய பாறைகளை உடைத்தும், சிறிய பாறை கற்களை அப்படியே டிப்பர் லாரிகளில் ஏற்றி சென்றுக்கொண்டு இருந்துள்ளது ஒரு கும்பல்.
இதுப்பற்றி அக்கிராமத்தை சேர்ந்த சிலர் சென்று விசாரித்தபோது, அவர்களை மிரட்டி விரட்டியுள்ளனர். இதனால் அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து இதுப்பற்றி மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு தகவலை கொண்டு செல்வோம் எனச்சொல்லி பாறை, முரம்பு மண் அள்ளி செல்வதை வீடியோ, போட்டோ ஆதாரத்துடன் புகாராக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் சமூக வளைத்தளங்களிலும் பரவ தொடங்கியது.
இந்நிலையில் நவம்பர் 1ந்தேதியும், அரசின் கனிம வளத்தை கொள்ளையடித்து கொண்டுள்ளது ஒரு கும்பல். இதனை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். வட்டாச்சியர் முருகன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பவயிடத்துக்கு வந்து வாகனங்களை மடக்கி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், கொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் ஒரு டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் தமிழ்நாடு கனிமவள விதிகளின்படி சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி செம்மண் கொள்ளையடித்த கொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரி வட்டாட்சியர் முருகன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஜே.சி.பி, டிப்பர் லாரி ஓன்றை பறிமுதல் செய்துள்ளனர் போலீஸார். இதுப்பற்றி கனிமவளத்துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.