Skip to main content

"செவ்வாயில் விவசாயம் செய்யக் கூட போகலாம்" - மயில்சாமி அண்ணாதுரை

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

mayilsamy annadurai talks about farmers farming in mars planet 

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை, கணினி அறைகளை திறந்து வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழ். அந்த தாய் மொழியில் படிப்பதை பெருமையாக கருதுவோம். சாதித்தவர்கள் எல்லாம் தாய் மொழியில் கற்றவர்கள் தான். அந்த தாய் மொழியை கற்பிக்கும் தாய்த் தமிழ் பள்ளிகள் குறைந்து கொண்டே வருகிறது. வளைகுடா நாடுகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 18 பள்ளிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இவற்றிற்கு தமிழ்நாடு அரசு உதவிகள் செய்ய வேண்டும். தாய்த்தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பணியாளர்களாக ஏற்க வேண்டும்.

 

இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் நான் இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதி அடிப்படையில் வாய்ப்பை பெற்றவன். காரணம் தாய்மொழிக் கல்வி தான். 50% பேர் தாய் மொழியில் படித்தவர்கள் தான் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். எனது 12வது செயற்கைக்கோள் சந்திராயன். ஆனால் 60 செயற்கை கோள்களில் எனது பங்கு இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை ஆள் இல்லாமல் போன செயற்கை கோள்கள். ஆனால் இனி நிலவுக்கு இந்தியரும் தமிழரும் போகலாம். செவ்வாயில் விவசாயம் செய்யக் கூட போகலாம். இந்தியாவில் சிக்கனமாக, சீக்கிரமாக செயற்கை கோள் செய்கிறார்கள் என்பதால் அமெரிக்கர்கள் கூட இங்கு வரலாம். ஆனால் விண்வெளித்துறை தனியாருக்கு போகும் நிலை உள்ளதாக சொல்கிறார்கள். இதை தமிழ்நாடு அரசு முன்னின்று எடுத்து செய்யும் போது தமிழர்கள் அதிகம் வாய்ப்பு பெறுவார்கள். இதற்கு தாய்மொழிக் கல்வி மிகவும் அவசியம் என்றார்.

 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனி மனிதனுடைய உயர்வுக்கும், குடும்பத்திற்கும், நாட்டினுடைய உயர்வுக்கும் அடுத்த கட்ட நிலைக்கு போக வேண்டுமென்றால் கல்வி அவசியம். அந்தக் கல்வி தாய் மொழியில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த தாய்மொழி மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக இருக்கக்கூடிய தமிழ் மொழி.‌ அந்த தமிழ் மொழியை தாய்மொழியாக பெற்றுள்ள நாம் தாய்மொழியில் பயிலும் பொழுது இன்னும் சிறப்பாக தமிழர்களும் தமிழும் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக மிளிர முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனுடைய வெளிப்பாடகத்தான் தாய்த் தமிழ் பள்ளியின் அடுத்த கட்ட முயற்சியாக புதிய கட்டடத்தை திறந்து வைக்க பெங்களூரிலிருந்து பறந்து வந்துள்ளேன். 

 

தாய்ப்பால் குடித்த குழந்தைகள் உடல் ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் என்று அறிவியல் பூர்வமாக சொல்கின்றனர். அதில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்க்கையில் சிறப்பாக செல்ல வேண்டும். போட்டிகளில் முன்னேற வேண்டும் என்றால் அடிப்படைக் கல்வி தாய்மொழிக் கல்வியாகத் தான் இருக்க வேண்டும். ஆங்கிலம் என்பது ஊடக மொழி தான் இன்னொருவருடன் பேசும் போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதை பின்னால் வைத்துக் கொள்ளலாம். தன்னை அழகாக வெளிப்படுத்த தான் ஆடை. ஆடையாக நான் இல்லை. அந்த வகையில் நான் நானாக இருக்க வேண்டும் என்றால் சுயமாக என்னுடைய முகவரி என்னுடைய அடையாளம் என்ற பொழுது அது தாய் மொழி தான் வரும். சுய சிந்தனை தான் முக்கியம் சிந்தித்த பிறகு அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது அதை ஆங்கிலத்தில் வெளிப்படுத்துங்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் சிந்திப்பது கட்டாயம் தாய் மொழியாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்." என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.