Skip to main content

குண்டர் சட்ட கைதி கொலை; போலீசார் விசாரணை

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

mayiladuthurai incident police investigation started

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெட் தினேஷ். ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல்நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போது தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

 

இந்நிலையில், நேற்று இரவு ரெட் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கோவில்பத்து பகுதியில் காரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நான்கு பேர் ரெட் தினேஷை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ரெட் தினேஷுக்கு கை மற்றும் கால் பகுதியில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்து அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். தகவல் அறிந்து  சென்ற சீர்காழி போலீசார், ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்த ரெட் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ரெட் தினேஷ் உயிரிழந்தார்.

 

இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவிட்டுள்ளார். ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்