நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ''ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால் அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. உடனே அங்குள்ள தொண்டர்கள் என்ன சொல்வார்கள் 'நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டிருப்பதே எங்களது வேலையா?' என்று கேட்பார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா கட்சிகளுக்கும் இது பொருந்தும். அதிமுகவோடு கூட்டணி இருந்தாலும், திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தும்.
ஏன் சென்னையில் எங்களுக்கு ஒரு சீட்டு வாங்கி கொடுக்கக் கூடாதா? சென்னை என்றால் திமுகவிற்கு மட்டுமே கொடுத்து விட வேண்டுமா? என என்னிடமே பல பேர் வந்து கேட்பார்கள். உனக்காக கேட்கிறேன் என்று சொல்வேன். ஒவ்வொரு கட்சியில் இருக்கும் தொண்டனும் ஒரு எம்எல்ஏ ஆக வேண்டும் ஒரு எம்பியாக ஆக வேண்டும் என ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது. அதனால் அவர்கள் கேட்கிறார்கள்.
பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மகாத்மா காந்தி சொன்னார் 'இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர்களே' என்று. அதுதான் காங்கிரசினுடைய கொள்கை. நாங்கள் அசாமிலோ, வங்காளத்திலோ உள்ள மக்கள் யார் என்று கேட்டால் இந்தியர்கள் என்று சொல்வோம். இதே பாஜக அங்குப் போய் கேட்டால் இவர் அசாமி, இவர் வங்காளி, இவர் வங்காள முஸ்லிம், இவர் வங்காள இந்து, இவர் பஞ்சாப் இந்து, சீக்கியர் என்று சொல்வார்கள். காந்தி கண்களுக்கு அப்படியெல்லாம் புலப்படாது. இந்திய எல்லைக்குள் வாழ்கின்ற அனைவரும் இந்தியர்கள் தான்'' என்றார்.