சென்னை முகப்பேர் பகுதியில் மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக சமீபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 நபர்களை ஜெ.ஜெ.நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் செல்போனில் இருக்கும் எண்களை கொண்டு கஞ்சா விற்பனையில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்(26) செல்போன் நம்பரும் அதில் இருந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
அவரோடு கைதான 7 பேரையும் அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு வரும் 18ஆம் தேதி வரை மொத்தம் 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு மகனைப் பார்க்க வந்த மன்சூர் அலி கான் மகனுக்கு அறிவுரை கூறி விசாரித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “எஃப்.ஐ.ஆர். ரெண்டு மாசத்துக்கு முன்னால வேறு சில பசங்க மேல போட்டது. அந்த பசங்க ஃபோனில் என் பையன் ஃபோன் நம்பர் இருந்ததால புடிச்சிருக்காங்க. என் ஃபோனிலும்தான் நடிகைகளோட ஃபோன் நம்பர் இருக்கு. அதுக்கு என்ன சொல்றது. என் பையன் என்பதுக்காக காப்பாத்த விரும்பல. தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்.
தமிழ்நாட்டோட நிலமை எப்படி இருக்குன்னு பாருங்க. ஸ்கூல், காலேஜ், பார்க் என எல்லா இடத்துலையும் போதை பொருள் இருக்கு. அது எப்படி கிடைக்குது. இதுனால எத்தனை இளைஞர்கள் பாதிக்குறாங்க. இதை தடுக்க வேண்டும். போதைப்பொருள் கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா டாஸ்மாக் நடத்துறாங்க. அதை மூட சொல்லுங்க. போதை ஒழிக்கனும்னு சரக்கு என்ற பெயரில் ரூ.3 கோடிக்கு படம் எடுத்தேன். ஆனால் அதுக்கு சரியான தியேட்டர் கிடைக்கல. ஓ.டி.டி.யிலும் கூட வரவிடல. எது தடுக்குது. ஒரு படத்தையே ரிலீஸ் செய்ய விடல. அப்புறம் எப்படி நீங்க போதை பொருள ஒழிப்பீங்க. ஒரே நாளில் போதைப்பொருள ஒழிக்க சட்டம் கொண்டு வரணும். அது நடக்கும். அப்போது நான் பொங்குவேன்” என்றார்.