இப்போதெல்லாம் ஜீயர்களும் வழக்கமான அரசியல்வாதிகளைப் போல் களத்தில் இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆன்மிகம் என்ற எல்லையைக் கடந்து சாதாரண அரசியல் குறித்தும் பேசத்தொடங்கி உள்ளனர். இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவுக்காக, வியாழக்கிழமை (ஜன. 23) சேலம் வந்திருந்த ராமானுஜ மன்னார்குடி ஜீயர், அண்மையில் பெரியார் பற்றி ரஜினி பேசிய விவகாரம், தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் பேசினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜீயர், ''தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் எந்த தவறும் இல்லை. தமிழர்களின் தாய்மொழி தமிழ் என்பதால், தமிழிலேயே குடமுழுக்கு நடத்தலாம்.
துக்ளக் விழாவில், நடிகர் ரஜினி பேசியதில் எந்த தவறு இல்லை. பெரியார், ஒரு தர்ம விரோதி. இந்து மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்களுக்கு வேறு மொழி, வேறு மதங்களைப் பற்றி பேசுவதற்கு துணிச்சல் இல்லை. துணிவு இருந்தால், மாற்று மதத்தினரைப் பற்றி பேசிவிட்டு இந்து கலாச்சாரத்திற்கு வரச்சொல்லுங்கள்,'' என்று தடாலடியாகச் சொன்னார்.