பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கிய நிதியைக் கையாடல் செய்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (17.08.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் அப்போதைய இணை இயக்குநர் ராஜ் ஈஸ்வரன் தலைமையில் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 13 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறி அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக அரசு விரைவில் உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதோடு அரசு அதிகாரிகள் கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தின் சார்பில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை” எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.