திருச்சி சிந்தாமணி பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தையல் இயந்திரம் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி திருச்சி விமான நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தையல் இயந்திரம் பழுது பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அந்த வீட்டில் மாலை வரை இருந்து தையல் இயந்திரம் சரி செய்து கொடுத்து விட்டு திரும்பியுள்ளார். மறுநாள் அதே வீட்டுக்குச் சென்று வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அந்த சமயம் மளிகை கடைக்கு சென்றிருந்த சிறுமியின் தந்தை வீடு திரும்பியபோது சிறுமியின் சத்தம் கேட்டு ஓடி சென்று அவர் ஜெயராமனை பிடித்து பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.