திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இரண்டாம்மாண்டு படிக்கும் மாணவிக்கு கல்லூரி இணை பேராசிரியர் தங்கபாண்டியன், பாலியல் தொந்தரவு தந்துள்ளார். இதுப்பற்றி புகார் தெரிவித்தும் உதவி பேராசிரியர்களும், பெண்கள் விடுதி வார்டன்களுமான புனிதா, மைதிலி இருவரும் தங்கபாண்டியனுக்கு சாதகமாக பேசி, அவர் சொல்வது போல் நடந்துக்கொள் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுப்பற்றி பரபரப்பான புகார் தெரிவித்தார் அம்மாணவி. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு, திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி என இரு விசாரணைகள் நடைபெற்றுள்ளன. காவல்துறை ஏ.டி.எஸ்.பி வனிதாவும் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 29ந்தேதி இன்று காலை வானாபுரம் எஸ்.ஐ சுபா தலைமையிலான போலிஸார் கல்லூரிக்கு சென்று விடுதி வார்டன்களாகவும் உள்ள உதவி பேராசிரியர்கள் புனிதா, மைதிலி ஆகிய இருவரிடம் 6 நிமிட ஆடியோவை ஓடவிட்டு அதுப்பற்றி விசாரணை நடத்தினர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்படைந்தது.
இந்நிலையில் தனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது, உண்மையை மறைக்க பார்க்கிறது என மனித உரிமை அமைப்பு, தமிழக முதல்வர், பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என பல தரப்பினருக்கும் கடிதம் மூலம் புகார் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.