மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
1992 - 96 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழை வழங்கக் கோரி பழனியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “2014 ஆம் ஆண்டு பொறியியல் பாடப் பிரிவில் அனைத்து பாடங்களுக்குமான தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற பிறகும் இதுவரை அதற்குண்டான மதிப்பெண் பட்டியல்களை வழங்கவில்லை” என மனுவில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரருக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்பெண் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதிப்பெண் சான்று வழங்காத விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் பிடிவாரண்டை செயல்படுத்தி ஜூலை 7 ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.