Published on 07/12/2020 | Edited on 07/12/2020
தேர்தலின் போது, பணப்பட்டுவாடாவை தடுக்கவும், தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் கோரி வழக்கறிஞர் ரத்தினம் தொடர்ந்த வழக்கினை விசாரித்து வருகிறது, மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
இந்த வழக்கின் விசாரணையில், ஓட்டுக்குப் பணம் வாங்கி பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், வாக்காளர்களே எங்கள் வீட்டில் 10 வாக்குகள், 15 வாக்குகள் என பேரம் பேசி ஓட்டுக்குப் பணம் வாங்குகின்றனர். அடிப்படை முறையே சரியில்லை. எனவே மாற்றம் ஒவ்வொருவரிடமும் இருந்து வரவேண்டும். வருமான வரித்துறைக்குத் தெரிந்தே கட்சிகளுக்கிடையே கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்று கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், விரிவான உத்தரவுக்காக, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.