
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி என்பவரைக் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி (22.03.2025) இரவு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் ஏ பிளஸ் ரவுடியாக வலம் வந்த வெள்ளை காளி என்பவருக்கும் கிளாமர் காளிக்கும் இடையே முன்விரோதம் இருந்து தெரியவந்தது. இந்த மோதல் காரணமாக மதுரை மாநகரில் பல கொலைகள் நடைபெற்றது தெரியவந்தது. வெள்ளை காளி தற்போது புழல் சிறையில் இருக்கும் நிலையில் வெள்ளை காளியின் ஏவுதலின் பேரில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் ரவுடி வெள்ளைக்காளி குழுவில் இருந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரவுடி வெள்ளை காளி மீது என்கவுண்டர் செய்யும் ஆபத்து உள்ளதாக அவரது சகோதரி திருச்சி குண்டூரைச் சேர்ந்த சத்தியஜோதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “என் சகோதரர் வெள்ளை காளி என்ற காளிமுத்து 2019ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மாதம் கிளாமர் காளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் வெள்ளை காளிக்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் அரசல்பட்டி போலீசார் உள்நோக்கத்துடன் இந்த கொலை சம்பவத்தில் வெள்ளை காளியையும் தொடர்புப்படுத்தியுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். எனவே வெள்ளை காளியையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து என்கவுண்டர் செய்ய வாய்ப்பு உள்ளது எனவே அதனைத் தடுக்கும் விதமாக வெள்ளை காளியிடம் விசாரணையை காணொளி மூலம் நடத்த வேண்டும். அந்த வீடியோவை நீதிமன்றத்தில் சம்ர்பிக்கவும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தனபால் அமர்வில் இன்று (17.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “என்கவுண்டர்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபமாக எத்தனை என்கவுண்டர்கள் நடந்துள்ளன. காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கின்றனர். குற்றவாளிகளைச் சுட்டுப்பிடியுங்கள். ஆனால் காலில் சுட்டு பிடியுங்கள் காவலர்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். அதற்கு அரசு சார்பில் வாதிடுகையில், “காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் ரவுடிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.