கிருஷ்ணகிரியில், காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த இளம் காதல் ஜோடி, ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த கார்கொண்டப்பள்ளி ரயில்வேகேட் அருகே உள்ள தண்டவாளப்பகுதியில் உடல்கள் சிதறிய நிலையில் ஆண், பெண் சடலங்கள் கிடந்தன. இதுகுறித்து ஓசூர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர்கள் ஓசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள ராமசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லேஷ் (25), ஜோதி (21) என்பது தெரிய வந்தது. எல்லேஷ், லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். ஜோதி, பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மகளின் காதல் விவகாரத்தை அறிந்த ஜோதியின் பெற்றோர், லாரி ஓட்டுநராக உள்ள எல்லேஷூக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளனர். அதேநேரம், எல்லேஷின் பெற்றோர் மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். எனினும் ஜோதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தி அடைந்த காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்கொலை முடிவெடுத்த அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று (ஜூலை 21) இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலம் வந்துள்ளனர். கார்கொண்டப்பள்ளி ரயில்வேகேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.