நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.