‘அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட சமுதாயக்கூடம்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது?’ என்னும் தலைப்பில் கடந்த ஜூன் 5-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். விவகாரம் என்னவென்றால் - அதிமுக ஆட்சியில் சிவகாசி எம்.எல்.ஏ.வாகவும் பால்வளத்துறை அமைச்சராகவும் இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 2020ல் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (திட்ட நிதி ரூ.25 லட்சம் + பொதுநிதி ரூ.25 லட்சம்) ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், தூய்மைப் பணியாளர் குடியிருப்பு பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு, ராஜேந்திர பாலாஜியால் திறந்துவைக்கப்பட்டது.
பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேரு காலனி, எம்.ஜி.ஆர். காலனி போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை-எளிய மக்கள், குறைந்த வாடகையில் இந்த சமுதாயக்கூடத்தில் இனி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், திறப்புவிழா கண்ட அந்த சமுதாயக்கூடம் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது.
இந்நிலையில், சமுதாயக்கூடத்தின் பின்னணியில் ‘வெறுப்பு அரசியல்’ மண்டிக்கிடப்பதைச் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது நக்கீரன் இணையதளம். சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரன் நம்மிடம் ‘விரைவில் சமுதாயக்கூடம் திறந்துவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’ என்று உறுதியளித்திருந்தார். ‘ரூ.50 லட்சம் செலவழித்து சமுதாயக்கூடம் கட்டியும் பயன்பாட்டுக்கு வரவில்லையே!’ என்ற வேதனையை பள்ளபட்டி பஞ்சாயத்தில் வசிக்கும் மக்கள் ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவித்தபடியே இருந்தனர்.
இதுகுறித்து நக்கீரனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடத்தைத் திறக்க முடிவெடுத்தது சிவகாசி மாநகராட்சி. முதன் முதலில் அச்சமுதாயக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் விருப்பமாக இருந்தது. அவரும் 16-ஆம் தேதி அங்கு நடந்த மங்கல விழாவில் கலந்துகொண்டு,சமுதாயக்கூடத்தின் மீது பார்வையைச் சுழலவிட்டு “சமுதாயக்கூடம் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.