திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவி 34, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவி 341, ஊராட்சி மன்ற தலைவர் பதவி 860, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவி 6207 என மொத்தம் 7442 பதவிகளுக்கு வரும் டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வேட்பாளர்கள் மனுவை திரும்ப பெற டிசம்பர் 19 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட கவுன்சிலருக்கு 255 பேர், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு 2127 பேர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 4250 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 15367 பேர் என மொத்தம் 21,999 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுப்பணித்துறை ஒய்வு விடுதியில் தங்கியுள்ளார். தேர்தல் தொடர்பாக புகார் தரவிரும்புபவர்கள் தினமும் காலை 1 மணி நேரம் அவரை சந்தித்து மனுதரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பல கிராமங்களில் சக போட்டியாளர்களுக்கு பணம் தந்து சமாதானம் செய்து போட்டியில் இருந்து விலகவைக்கும் பேரத்தில் பண வசதி படைத்த வேட்பாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சில இடங்களில் பதிவிகள் 50 லட்சம் வரை ஏலம் விடப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.