சிதம்பரம் உட்கோட்ட பகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் முடிகண்டநல்லூரை சேர்ந்த ரவி (58) இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் கூலித்தொழிலாளி. இவர் சனிக்கிழைமை மாலை அவரது குடிசை வீட்டிற்குள் மழை நீர் ஒழுகாமல் இருக்கும் வகையில் பிளாஸ்டிக் பேப்பரை கூரை மீது போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த லேசான மழையால் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
இவருக்கு அருகே இருந்த அவரது தாய் விசாலத்தையும் (80) மின்னல் தாக்கி அவரது ஒரு இடது கை செயல் இழந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த சோழதரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 108 வாகனம் மூலம் விசாலத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கூலித்தொழிலாளி மின்னல் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் சிதம்பரம் நகரத்தில் வடக்கு வீதி மற்றும் கீழே வீதி சந்திப்பில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னல் தாக்கி கேமராவின் கண்ட்ரோல் பாக்ஸ் எரிந்தது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்காணிப்பு கேமராவுக்கு வரும் மின்சாரத்தை சிறிது நேரம் நிறுத்தி தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.