மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க பெண்ணை கொன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருகின்றனர் அஜித்குமார் - மகாலட்சுமி தம்பதியினர். இதில் அஜித்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குமார் அவருக்குத் தங்க நகை பரிசளிக்கத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர் வேல்விழி என்பவரிடம் பணம் அல்லது அடைமானம் வைத்து பணம் பெறும் வகையில் நகை கேட்டுள்ளார். அதற்கு வேல்விழி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், வேல்விழியை துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வேல்விழி அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, அவரின் உடலை சாக்குப்பையில் மூட்டைக் கட்டி கோயம்பேடு தீயணைப்பு நிலையத்தின் பக்கத்தில் வீசியுள்ளார். இந்த நிலையில் திருக்கோவிலூரில் வசித்து வரும் வேல்விழியின் தந்தை ராஜேந்திரன் மகளைக் காணவில்லை என்று சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அஜித்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து அஜித்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிதிக்கப்பட்டது. அபராதத் தொகையில் ரூ. 14 ஆயிரத்தைப் பெண்ணின் பெற்றோரிடம் வழங்க வேண்டும் என்றும், மேலும் தமிழக அரசிடம் கூடுதல் இழப்பீடு பெறுவதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி டி.எச்.முகமது பாரூக் உத்தரவிட்டார்.