தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் சிவப்பாகப் பிறந்ததால் சந்தேகமடைந்த கணவன், காதல் மனைவியைக் கொலை செய்த சம்பவத்தில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள அரிசிக்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். ஓட்டுநராகப் பணியாற்றி வந்த ஐயப்பன், கடந்த 2012 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அகிலாவிற்கு முதலாவதாகப் பிறந்த ஆண் குழந்தை சிவப்பாக இருந்ததால் கணவன் ஐயப்பன் அகிலா மீது சந்தேகம் அடைந்துள்ளார். நான் கருப்பாக இருக்கும் பொழுது நீயும் கருப்பாக இருக்கும் பொழுது குழந்தை மட்டும் எப்படி சிவப்பாகப் பிறக்கும் என மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது பெண் குழந்தையும் சிவப்பாகப் பிறந்ததால், ஐயப்பன் மேலும் ஆத்திரமடைந்து மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அகிலாவின் கழுத்தைக் கயிற்றால் நெரித்துக் கொலை செய்துவிட்டு ஐயப்பன் ஓடிவிட்டார். இந்த வழக்கில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஐயப்பனை கைது செய்து இது தொடர்பாக விசாரணை செய்து அவரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் மனைவியைக் கொலை செய்த ஐயப்பனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றவாளி ஐயப்பன் திருச்சி மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.