“ராகுல் காந்திதான் காங்கிரஸ்காரர்களுக்கு கடவுள்” என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசியுள்ளார்.
இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பேசுகையில், ''கட்சிக்கு முதுகெலும்பு என்றால் அது அந்தந்த மாவட்டத் தலைவர்கள்தான். எனவே மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் இல்லாமல் கட்சியினுடைய அமைப்பு சிறப்பாக செயல்பட முடியாது. உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் நடத்துவது இவற்றில் எல்லாம் உங்கள் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்காக உங்கள் எல்லோரையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.
ராகுல் காந்தி தனது சிறப்பான பயணத்தை நமது தமிழகத்தில் துவங்கினார். கன்னியாகுமரி தொடங்கி ஜம்மு காஷ்மீர் வரை போகிற 3,500 கிலோமீட்டர், 160 நாள் பாதயாத்திரை என்பது தமிழ்நாட்டில் துவங்கி இருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக கருதி பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சிறந்த தொடக்கம் வெற்றிகரமான முடிவுக்கு ஆரம்பம் என்பார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பேசும்போதெல்லாம் ‘காங்கிரஸ்காரர்களுக்கு ராகுல் காந்திதான் கடவுள்’ என்றேன். கடவுள் என்று நமது ஈ.வி.கே.எஸ் ஒத்துக்கொள்ளமாட்டார். கடவுள் இல்லை என்பவர் அவர். வேண்டுமானால் ஈ.வி.கே.எஸ் ராகுலை குரு என்று எடுத்துக் கொள்ளட்டும் அல்லது ஆசான் என எடுத்துக்கொள்ளட்டும்'' என்றார்.