இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் ஜான்சிங் காலமானார். சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் ஜான்சிங் மே 7ஆம் தேதி அதிகாலை பெங்களூரிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டத்துக்காரரான முனைவர் ஜான்சிங், இந்தியக் காடுகள் அனைத்தையும் அறிந்தவர். அவற்றில் பெரும்பாலானவற்றை நடந்தே கடந்தவர். உடல் நலம் குன்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன்புகூட வட இந்தியக் காடுகளில் ஆய்வுக்காகப் பல கிலோமீட்டர் நடந்து அந்த அனுபவத்தையும் பதிவு செய்துள்ளார். இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தின் முதன்மையராக ( Dean, Wildlife Institute of India) பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
அவரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய வனப்பணி அலுவலர்கள் (IFS officers) நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள். இந்தியக் காடுகள் பற்றியும் காட்டுயிர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்கள் அரிய ஆவணங்கள். அவரது ஆழமான படிப்பறிவும், இடைவிடாத கள ஆய்வும் இந்தியக் காட்டுயிர் மேலாண்மைக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பிறரது முரண்பாடுகள் பற்றியக் கவலையின்றி, தனது கருத்துகளை உறுதியுடன் சபையில் எடுத்துரைப்பவர் எனப் பெயர் பெற்றவர்.