குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த விதி 2019ஐ தமிழகத்தில் சென்ற ஜனவரி முதல் மாநில அரசு அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த குற்றவியல் நடைமுறை விதிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் குறிப்பாக ரூல் 27(2)ல் குற்றவாளி ஒருவர் தனது பிரதிநிதியாய் வழக்கறிஞர் அல்லாத ஒருவருக்கு பொது அதிகாரம் கொடுக்கலாம். அப்படி பொதுஅதிகாரம் பெற்றவர் குற்றவாளிக்காக வழக்கை நடத்தலாம். இதற்கு தமிழக வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றி மூத்த வழக்கறிஞர்கள் "நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால் நோயின் தன்மை அதனால் ஏற்படும் பாதிப்பு அதை கட்டுப்படுத்த அந்த நோயாளியை குணப்படுத்த மருத்தும் படித்த பாக்டரால் தான் முடியும். ஆனால் டாக்டர் தேவையில்லை ஊசி போடத் தெரிந்த செவிலியரே போதும் என்பது போல உள்ளது. மொத்தத்தில் வழக்காடுமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் தேவையில்லை என்பது தான் அது" என்கிறார்கள்.
புதிய குற்றவியல் நடைமுறை வதிகளை முழுமையாகத் திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 07-02-2020 ஒருநாள் கோர்ட் பாய்காட் என்ற புறக்கணிப்பு போராட்டத்தில் தமிழக, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு (JACC) அமைப்பு இன்று ஈடுபட்டுள்ளது. அதே போல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 2009ம் ஆண்டு, பிப்ரவரி 19 ம் தேதி வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை ஒவ்வொரு வருடமும் அந்நாளை கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள்.
இந்தாண்டும் வருகிற 19ந் தேதியன்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்கள். வழக்கறிஞர்கள் கோர்ட் பாய்காட் போராட்டத்தால் வழக்கில் சம்பந்தப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய பொது மக்கள் பலருக்கும் சிரமங்கள் ஏற்பட்டதோடு, வார இறுதி நாளான இன்று ஜாமீனுக்கு வாய்ப்புள்ளவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.