தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 7 ஆவது புத்தகத் திருவிழா நடத்த ஆயத்தமாகி வருகிறது.
புதுக்கோட்டை 7 ஆவது புத்தகத் திருவிழா மாமன்னர் கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஸ்டால்களில் புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் கண்காட்சிகள், கவியரங்கம், கருத்தரங்கங்களும் நடக்கிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
புத்தகத் திருவிழாவை மாவட்ட மக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதமாகவும், "வாசித்தலை நேசிக்க வேண்டும்" என்பதற்காகவும் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 'புதுக்கோட்டை வாசிக்கிறது' என்ற தலைப்பில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்க, அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், வாசிப்பை நேசிக்கும் புத்தகப் பிரியர்கள், பொதுமக்கள் மட்டுமின்றி வேலை நடக்கும் குளக்கரைகளில் நூறு நாள் பணியாளர்கள் என ஒரே நேரத்தில் லட்சம் பேர் வாசித்தனர்.
நூறு நாள் பணியாளர்களும் வேலைத்தலங்ளில் வாசிப்பதைப் பார்த்ததும் சில மூதாட்டிகள் "இதைப் பாக்கும் போது அறிவொளியில் பேரெழுத கத்துக்கிட்டது ஞாபகம் வருதுய்யா" என்றது நெகிழ வைத்தது.