Skip to main content

கடித்து இழுத்துச் சென்ற முதலை; கூலித் தொழிலாளி உயிரிழப்பு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Laborer dies after being bitten by crocodile

 

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் பழைய கொள்ளிடம் ஆற்றில் மாட்டைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த விவசாய கூலித் தொழிலாளியை முதலை கடித்து இழுத்துச் சென்றதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் ஓரத்தில் பழைய கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை அதே ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி அஞ்சாம்புலி மகன் சுந்தரமூர்த்தி (55). அவரது மாட்டைக் குளிப்பாட்டுவதற்காகப் பழைய கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்கு மாட்டை ஓட்டிச் சென்று ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முதலை ஒன்று அவரைக் கடித்து தண்ணீரில் இழுத்துச் சென்றது.  

 

Laborer dies after being bitten by crocodile

 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், 'முதலை... முதலை...'. என்று அலறினார். கரையிலிருந்து இதைப் பார்த்தவர்கள் இதுகுறித்து குமராட்சி தீயணைப்புத் துறையினருக்கும், சிதம்பரம் வனத்துறையினருக்கும் தகவல் தந்தனர். குமராட்சி தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் சிதம்பரம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீனவர்கள் உதவியுடன் சுந்தரமூர்த்தியைத் தேடினர்.

 

சுமார் 1 மணி நேரத் தேடலுக்குப் பின்னர் மீனவர் வலையில், சுந்தரமூர்த்தியின் உடல் சிக்கியது. பின்னர் சுந்தரமூர்த்தியின் உடல் கரைக்குக் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்