சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், பாஜக இணை அமைச்சர் எல். முருகன் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “திமுகவினுடைய இந்த ஆட்சியில் தமிழகத்தில் இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசு சாசனத்தினுடைய உச்சபட்ச அதிகாரம் படைத்தவராக தமிழக ஆளுநர் மாநிலத்தில் இருக்கிறார். தமிழக ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு இன்றைக்கு தமிழகத்தினுடைய சட்ட ஒழுங்கு இருக்கிறது. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு ஆளுநருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கும் பொழுது சாதாரண மனிதனுடைய பாதுகாப்பானது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
தமிழக அரசாங்கம் முற்றிலுமாக தோற்றுப் போன அரசாங்கமாக இருக்கிறது. திமுக அரசாங்கம் தோற்றுப்போன அரசாங்கமாக உள்ளது. போலி திராவிட மாடல் அரசாங்கம் இன்றைக்கு தமிழகத்தினுடைய சட்ட ஒழுங்கே பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இன்று நடந்த இந்த சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த குற்றவாளியோடு நிற்காமல் இந்த குற்றவாளிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள். இந்த குற்றவாளியை இயக்கியது யார் என்று தமிழக அரசு கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குற்றவாளி ஏற்கனவே 2022-ல் பிப்ரவரி மாதம் கமலாலயத்தில் இதேபோல பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார். அப்பொழுதே சரியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடந்திருக்குமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.