Skip to main content

ஓயாத மணல் திருட்டு... கண்டுகொள்ளாத வருவாய் மற்றும் காவல்துறை..!!! 

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

    அரசிற்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைப்பெற்று வருவதாகவும், அதற்கு உள்ளூர் வருவாய்த்துறையும், காவல்துறையும் உடந்தையாக இருக்கின்றார்கள் என மாவட்ட நிர்வாகத்தினை நோக்கி பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் அரசிற்கு எதிரான கோபத்தில் இருக்கின்றார் படுக்கப்பத்து மக்கள்.

 

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம், படுக்கப்பத்து கிராமத்தில் அரசிற்கு சொந்தமான நீர்ப்பிடிப்புப் பகுதி சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இதில் கடந்த 17/02/2019 இரவு முதல் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரம் மூலம் சட்ட விரோத மணல் திருட்டு நடைப்பெற்றதால் அங்குள்ள பொதுமக்களால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் பயனில்லை. 

 

Sand

"இது தொடர்பாக சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் பேசினோம். அவரோ, " எங்க ஊர் பொதுமக்களின் வேண்டுகோள் படி குளத்தை சுத்தம் செய்ய சொன்னேன் என்றும் வேலையை உடனே நிறுத்துகிறேன், மண் அள்ள சொல்லவில்லை" என்று சொல்ல, தட்டார்மடம்  காவல்நிலைய அதிகாரிகளோ, "தாசில்தார் அனுமதியோடு சீட்டு போட்டு தான் மணல் அள்ளுகிறார்கள்" என்று சொல்லுகிறார்கள். 

''எங்களின் தொடர் அழுத்தத்தால் திருச்செந்தூர்  கோட்டாட்சியர்  இரவோடு இரவாக சம்பவ இடத்தைப் பார்வையிட்டு 4 லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றி பிர்க்கா ஆய்வாளர் முன்னிலையில்  சம்பவ இடத்திலேயே நிறுத்தி சென்றார். எனினும் காவல்துறை ஆதரவுடன் இன்று வரை மணல் திருட்டு நடைபெறுகின்றது. இதனால் மணல் திருட்டில் அரசுக்கு பல கோடி இழப்பு என்பதனைக் காட்டிலும் அப்பகுதியின் நீர் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டம் தான்" என்கின்றனர் படுக்கப்பத்து கிராம மக்கள். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.