Skip to main content

தனியார் ரகசிய உரிமைகளை ‘அரசுடமை’யாக்கும் கொடுமை - கி.வீரமணி கண்டனம்

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
K veeramani



 

தனியார் ரகசிய உரிமைகளை ‘அரசுடைமை’யாக்கும் கொடுமை; ஜனநாயகம் ஒழித்த பாசிச முயற்சிகள் சட்டபூர்வமாக அரங்கேற்றப்படுகின்றன; நாட்டிலுள்ள எல்லா கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது; ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை. இதனை ஜனநாயக சக்திகள் - முற்போக்காளர்கள் அணிவகுத்து கருத்துரிமையை காக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் - ஆட்சியின் கொடுங்கரங்கள் பாசிசக் கரங்களாக நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வளர்ந்துகொண்டே வருகிறது!
 

பதவிப் பிரமாண வாக்குறுதிகள் 
காற்றில் பறந்து போய்க் கொண்டிருக்கின்றன!

 

 

இந்திய அரசியல் சட்டத்தின்மீது எடுத்த வாக்குறுதி - பிரமாணம், நாளும் காற்றில் பறந்து போய்க் கொண்டிருக்கிறது!!

 

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைப் போல் அமல்படுத்திய வண்ணம் உள்ளது - பிரதமர் மோடியின் ஜனநாயகப் போர்வையில் உள்ள எதேச்சதிகார அரசில்.
 

கறுப்புச் சட்டங்களும், அடக்குமுறைகளும் நாளும் வெளிச்சம் போட்டு, ஜனநாயகவாதிகளின் கருத்துரிமையின் கழுத்தை நெரித்திடும் ஏற்பாடுகள் - தோல்வி பயத்தின் காரணம் மேலும் தீவிரமடைகின்றன.

இனி எல்லாக் கணினிகளையும் மத்திய அரசின் உள்துறை அறிவித்துள்ள விசாரணை அமைப்புகள் இனி கண்காணிக்கலாமாம்!
 

தனியார் ரகசிய உரிமைகளை
 ‘அரசுடமை’யாக்கும் கொடுமை

 

 

10 விசாரணை அமைப்புகளுக்கு இந்த எல்லா கணினிகளையும் - அது யாருடைய கணினியாக இருந்தாலும் - அதனை கண்காணித்து, அதில் உள்ள அத்தனைத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அதில் பாதுகாத்து வைக்கப்படும், பரிமாறிக் கொள்ளப்படும். அத்தனைத் தகவல்களையும் கண்காணித்து, இடைமறித்து (Interception), தனி மனித அந்தரங்கம் (Personal) என்பதற்கு இடமின்றி,Right to Privacy - தனியார் ரகசிய உரிமைகளை ‘அரசுடைமை’யாக்கும் கொடுமை! ஜனநாயகத்தை அழிக்க பாசிச முயற்சிகள் சட்டபூர்வமாக அரங்கேற்றப்படுகின்றன.

 

வெள்ளையர்களின் ரவுலட் சட்டத்தின் 
மறு அவதாரம் அல்லவா?
 

ஒத்துழைக்க மறுத்தால் 7 ஆண்டு சிறை; என்ன நியாயம் இது? வெள்ளையர்களின் ரவுலட் சட்டத்தின் மறு அவதாரம் அல்லவா?
 

மோடியின் ஆர்.எஸ்.எஸ். உள்பட அனுபவித்த - கண்டித்த இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி காலத்தின் மீள் உயிர்த்தெழுப்பும்  நிலை அல்லவா? அவர்களாவது நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி இந்த உரிமைகளைப் பறித்தனர். இப்போது அந்த அறிவு நாணயம்கூட இல்லையே!
 

U.P.A. அரசின் ஓர் ஆணை என்று வழமைபோல ஒரு சாக்குப் போக்கு கூறுகிறார்கள்! இப்படி விளக்கம் கூறி, அந்தப் போர்வைக்குள் புகுந்துகொள்வதற்கு இவர்களுக்கு வெட்கமாக இல்லையா? அதனால்தானே அவர்கள் எதிர்க்கட்சி - நீங்கள் ஆளும் கட்சி அதிகாரத்தில் - அதற்குப் பெயர்தானே ஜனநாயகம் - தேர்தல் எல்லாம்!


இதை வசதியாக ‘‘செலக்டிவ் அம்னிஷியா’’ போல் மறந்துவிட்டு, இப்படி ஒரு காரணம் தேடி பதுங்குவதற்கு வெட்கப்பட வேண்டாமா?
 

எந்த ஆட்சிக்கும் உரிமையேயில்லை!
 

அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் என்பது அதன் அடிப்படைக் கட்டுமானம் (Basic Structure of the Constitution) அதைப் பறிக்க, சுருக்க, நெருக்க எந்த ஆட்சிக்கும் உரிமையேயில்லை ஜனநாயகத்தில்.


உடனடியாக நாட்டின் அத்துணை ஜனநாயக சக்திகள், முற்போக்காளர்கள் அணிவகுத்து இதனை முறியடித்து, கருத்துரிமையைக் காக்கவேண்டும். ஆபத்து! மாபெரும் ஆபத்து!!
 


உலகிலேயே அதிகமாக கணினிகளை, கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா - நம் நாடு முதல் இடத்தில் உள்ள நாடு என்பதால், இதற்கு மக்கள் அனைவரும் கடும் கண்டனத்தை எழுப்பக் காலதாமதம் செய்யக்கூடாது.


தேச விரோத செயல்களின்மீது அரசின் நடவடிக்கை உண்மையாக இருந்தால், பொய்க் குற்றச்சாட்டு, பழிவாங்கும் அரசியல் பார்வை கூடாது; நடவடிக்கை எடுக்கட்டும்.

 

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் ஆதரவு 
தீவிரவாத அணிகளே!

 

இராணுவத்திற்கு கொடுக்கப்படும் வெடிமருந்தைக்கூட பயன்படுத்திய தேசீயக் குற்றவாளிகள் (நீதிமன்றங்களே கூறியுள்ளன)  ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் ஆதரவு தீவிரவாத அணிகளே - பகுத்தறிவுவாதிகளை திட்டமிட்டு சதி ஆலோசனை செய்து சுட்டுக் கொன்றவர்களும் அவர்களே என்பது புலனாய்வின் முடிவு. அதற்கென்ன பதில்? இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்