உலகப் புகழ்பெற்ற கர்நாடகாவில் மைசூர் தசரா பெருவிழாவிற்கு அடுத்த இடத்தில் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.
குலசேகரன்பட்டினத்தின் ஞான மூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் அருள் பாலிக்கிறார் தேவி ஸ்ரீ முத்தாரம்மன். பண்டைய காலத்தில் குலசேகரன்பட்டினம் மன்னர்களின் கடல் வணிகம் தொடர்பான தலைவாயில் துறைமுகமாக இருந்தது. கடல் வணிகத்தில் ஈடுபடும் வணிகர்கள் கடற்கரையில் ஆலயமாய் அருள்பாலிக்கும் ஸ்ரீமுத்தாரம்மனை தரிசித்து விட்டுக் கிளம்புவர். அவர்களின் மூலமாக குலசை முத்தாரம்மன் ஆலயமும், தசார திருவிழாவும் கடல் தாண்டி பெயர் பெற்று சிறப்பு வாய்ந்ததுண்டு. காலப் போக்கில் குலசை துறைமுகத்தின் பயன்பாடுகள் குறைந்து துறைமுகம் மாற்றப்பட்டது.
அது போல் பல்வேறு சிறப்புகளையும் மகிமையையும் கொண்ட முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழா வருடம் தோறும் 10 நாள் திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு. முக்கிய நிகழ்வாக தசரா அன்று முத்தாரம்மன் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிற அரிய காட்சியை காண தமிழகத்தின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. அங்கு திரளும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் அம்மனை விடிய விடிய தரிசிப்பர்.
அது சமயம், பக்தர்கள், கிராமங்கள் தோறும் தசரா குழுக்கள் அமைத்து மாலை அணிந்து விரதமிருப்பர் விழா நடக்கிற 10 நாட்களிலும், தங்களுக்கு பிடித்தமான காளி, பத்ரகாளி, சடாமுனிகள், வேடன் வேடுவர் போன்ற பல்வேறு வகையான வேடமணிந்து வசூல் செய்த காணிக்கைகளை நேர்ச்சையாக ஆலயத்தில் செலுத்துவர். தசரா குழுக்கள் தீச்சட்டி ஏந்தியும் குலசை வருவதுண்டு.
2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கரோனா தொற்று லாக்டவுன் காரணமாக பக்தர்களின் பங்கேற்பின்றி குலசையில் மகிஷா சூரசம்ஹார நிகழ்வுகள் நடந்தன. இந்த ஆண்டு குலசை முத்தாரம்மன் தசரா நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. இடைவெளி காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குழுமினர். இந்த ஆண்டு தசரா திருவிழா செப் 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பத்து நாட்கள் விழாவாக சிறக்கிற ஒவ்வொரு தினமும், இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. அது சமயங்களில் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தேறியது.
விழாவின் முத்தாய்ப்பான 10ம் திருவிழாவான அக் 05 அன்று சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைக்குப் பின்பு நள்ளிரவு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பு எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்ததோடு பக்தர்களின் ஒம்காளி, ஜெய்காளி என பக்திகோஷங்கள் தரையதிரக் கிளம்ப தேவி ஸ்ரீ முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார். சம்ஹாரம் முடிந்த உடன் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அம்மனுக்கு அதிகாலை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு, சாந்தாபிஷேக ஆராதனையும் பின்னர் திருத்தேரில் பவனி வந்து தேர்,நிலையம் சென்றடைதலும் நடந்தது. அன்றைய தினம் பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்களின் விரதத்தை முடித்துக் கொண்டனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அத்யாவசியமான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் குலசை தசரா திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனின் தலைமையில், கண்காணிப்பின் கீழ் சுமார் 2100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.