தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரி, சிதம்பரம் அருகே காமராஜர் மரைன் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகிறார். இதனை இவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் நிர்வகித்து வருகிறார்கள். இவரது வீடும் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் பயின்ற விஷ்ணுவர்தன் என்ற மாணவர் மும்பையில் உள்ள கப்பல் துறை இயக்குனரகத்திற்கு புகார் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் கல்லூரியில் ஆறுமாத படிப்பு ஒன்றுக்கு 240 மாணவர்களிடம் கோடிகணக்கில் வசூலிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரே நாளில் மட்டும் வகுப்பு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கப்பல் துறை இயக்குனரகத்தில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் தமிழக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கே.எஸ் அழகிரியிடம் கேட்டபோது, கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் கல்லூரிக்கு முறைதவறி வந்தார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதுள்ள குற்றத்தை மறைத்து புகார் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தெளிவான பதிலை அளித்து விட்டோம். இதனை கல்லூரியில் வேலை பார்த்த ஒருவர் வேலையை விட்டு நீக்கியதால் அவர் இந்த கடிதத்தை எடுத்து எனக்கு எதிராக செயல்படும் சிலரிடம் கொடுத்து பெரிய விஷயமாக மாற்றி உள்ளார். இதில் ஒன்றும் உண்மை சம்பவம் இல்லை என்று கூறினார்.