Skip to main content

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கோவையில் ஐயப்ப பக்தர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்

Published on 14/10/2018 | Edited on 14/10/2018
saba

 

சபரிமலை அய்யப்பன் திருக்கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கோவையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் இட்டு ஊர்வலம் சென்றும் ஐயப்பன் பஜனை பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே இருமுடி கட்டி தரிசனம் செய்து வந்த நிலையில் அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்யலாம் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பிற்கு நாடு முழுவதிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. 

 

இந்த நிலையில் சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகவும் சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோவையில் கோயமுத்தூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஐயப்பன் பஜனை பாடி போராட்டம் ஆகியவை நடைபெற்றன. 

 

முன்னதாக சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயப்பன் திருக்கோவிலில் சரணங்கள் பாடி ஐயப்ப சுவாமி ரதத்துடன் பேரணியாக புறப்பட்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஜிபி சந்திப்பு, சத்தி சாலை, காந்திபுரம்,  திருவள்ளுவர் பேருந்து நிலையம் வழியாக ஐயப்பன் சரணங்கள் பாடியபடி ஊர்வலமாக வந்து காந்திபுரம் வீகேகே மேனன் சாலையை அடைந்தனர்.  பின்னர்   சாலையில் அமர்ந்து ஐயப்பன் பஜனைப் பாடல்களை பாடி சபரிமலைக்கு ஆதரவான நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பஜனை பாடல்கள் பாடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இப்போராட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் தேசிய கயிறு வாரிய தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆரிய வைத்திய பார்மசி நிறுவன தலைவர் கிருஷ்ணகுமார் வாரியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

 
News Hub