புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஒப்பிலாமணியம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் சுவாமி (சிவன்) கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்யப்பட்டு பிரமாண்டமான முறையில் குடமுழுக்கு செய்யப்பட்டது.
இந்த ஆலயத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் காதணி விழா, திருமணம் உட்பட ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தினசரி அபிசேகங்களிலும், பிரதோஷ வழிபாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த ஆலயத்தின் முன்னால் உள்ள தடாகத்தில் குளித்த பிறகே தலைமைப் புலவர் தர்க்கம் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஆலயத்தின் முன்னால் உள்ள தடாகத்தின் மையப் பகுதியில், சுமார் 81 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிவன் சிலையும் எதிரில் தலைமைப் புலவர் நக்கீரருக்கு 7 1/4 (ஏழேகால்) அடி உயரத்தில் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்று (11.03.2021) சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தைச் சுற்றிவந்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று நடந்த சிவராத்திரி திருவிழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்கி இருந்தனர். இரவு முழுவதும் பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், மஞ்சள் கொண்டு அபிசேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.