காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நாடே பதட்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நாகை மாவட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்திற்கு உரிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைவர் நேற்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுற்றுலா தளமான நாகூர் தர்ஹா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. மேலும், ரயில் மூலமாக வரும் பயணிகளின் வரத்தும் குறைந்தால் நாகூர் தர்ஹா, வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இது குறித்து வேளாங்கண்ணியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறுகையில், ’’எப்போதுமே வேளாங்கண்ணியில் பக்தர்கள் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவிருக்காது, அதுவும் விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். காஷ்மீர் பிரச்சனையால் மக்களிடையே பதற்றம் உறுவாகி சுற்றுலா வர தயங்குகின்றனர், அதோடு வேளாங்கண்ணி போன்ற இடங்களில் போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் மக்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது, வேளாங்கன்னி மட்டுமின்றி நாகூர் உள்ளிட்ட அனைத்து இடங்களுமே வெறிச்சோடிக்கிடக்கிறது’’என்கிறார்.