காவிரி விவகாரத்திற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன.
இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரம் இது. காவிரி விவகாரத்திற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்துவது நல்ல மாற்றம். காவிரி விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பது போல் அரசியலிலும் மாணவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
காவிரி விவகாரத்திற்காக தேவைப்பட்டால் மக்கள் நீதி மய்யம் போராட்டம் நடத்த தயாராக உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து ஏப்ரல் 4-ல் திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.