Skip to main content

“செல்வாக்கையும் சொல்வாக்கையும் நிலை நிறுத்தியவர்..” - கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
 K. M. Khader Mokhideen Condolences for vijayakanth

தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவரது இரங்கல் செய்தியில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த், சிறிது காலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் 28-12-2023 காலை தனது 71 வயதில் மரணமுற்ற செய்தி மிகுந்த துக்கத்தையும் வேதனையையும் தந்தது. தமிழகத்தில் திரைப்படத் துறையில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரசிகர்களின் மனத்தில் இடம் பெற்று, தனக்கென தனியொரு தமிழ் வழி வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வந்தவர். தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் தனது செல்வாக்கையும் சொல்வாக்கையும் நிலை நிறுத்தி, தமிழகச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து, எண்ணற்ற இதயங்களில் இடம் பிடித்திருந்தார்.

 K. M. Khader Mokhideen Condolences for vijayakanth

தமிழக வரலாற்றில் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராஜாஜி, காமராஜர், கண்ணியத்துக்குக்குரிய காயிதே மில்லத் என்றெல்லாம் புகழ் பெற்றுள்ளவர்கள் பட்டியலில் ‘விஜயகாந்த்..’ ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று போற்றப்படுபவராக விளங்கி வந்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் நல்லுள்ளம் கொண்டவர் என்றும், பிறருக்கு உதவுவதில் பாரி வள்ளல் போன்றவர் என்றும், துணிச்சலாகப் பேசுவதில் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று முழங்கிய நக்கீரன் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும் பலரும் புகழ் மாலை சூட்டுவதைக் காண முடிகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூப்பனார் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு வளர்ந்து வரும் நடிகர் உலக நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜயகாந்த், சில நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய நினைவுகள் எல்லாம் வந்து போகிறது. மதுரையில் முஸ்லிம் சமூக மக்களுடன் மிகமிக நட்போடும் உறவோடும் வாழ்ந்து வந்துள்ளார் என்று சிலாக்கித்துப் பேசியதை எல்லாம் கேட்டிருக்கின்றோம்.

தமிழகத்தில் பொது வாழ்வில் எல்லாருடைய பாராட்டுக்கும் உரிய நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார். அவரின் மறைவால் வாடும் அவருடைய இயக்கத் தோழர்களுக்கும் அவரின் அன்பு குடும்பத்தாருக்கும் இ.யூ. முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது. மறைந்தும் மறையாத விஜயகாந்த் அவர்களின் ஆன்ம சாந்திக்கு நாம் அனைவரும் இறைஞ்சுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்