கொடுங்கையூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரை திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில் அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு ராஜசேகரை அழைத்து சென்று சிகிச்சை பெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்த, அவரது குடும்பத்தினர் இந்த சம்பவத்தில் நீதி கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட் லட்சுமி நேற்று நேரில் விசாரணை செய்தார். அவரின் முன்னிலையிலேயே ராஜசேகரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ராஜசேகரின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், ரத்தம் வெளியேறியதற்கான தடயங்கள் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து ராஜசேகரின் உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ராஜசேகரின் தாயார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இதில் நாங்கள் வக்கீல் வைத்தோம். அவர் சொல்கிறார் ஈன சடங்கு செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள். நான் இரண்டு லட்சமாக கேட்டு வாங்கி தருகிறேன். அத முடிச்சிட்டு நான் போலீஸ்கிட்ட இருந்தது உங்களுக்கு 7 லட்சம் ரூபாய் வாங்கித்தரேன்'னு சொன்னார்கள். ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கணும். முதல்ல அவர்களை தூக்கி உள்ள வைக்கணும். அவங்கள முதல்ல சிறையிலே பாக்கணும். அஞ்சு போலீஸ் அடிச்சாங்க அடிச்சவங்ககிட்ட ஆளுக்கு 2 லட்சம் வாங்கித்தரேன்னு சொன்னாரு. ஆனால் அவங்க அஞ்சு பேரையும் உள்ளபோடனும் போட்டாதான் என் பையன் உடலை வாங்குவேன். எனக்கு ஒரு நல்ல தீர்ப்பா முதலமைச்சர் சொல்லணும். ஒரு கைய அடிச்சு ஒடைச்சிருக்காங்க. கால் உடைந்து திரும்பியுள்ளது. ஒண்ணுக்கு போற இடம் வீங்கிப்போய் இருக்கிறது. நான் ஜட்ஜ் மேடத்துகிட்டயே சொன்னேன். தொடைல அடிச்சு கன்னிப்போய் இருக்கிறது. என் பெரிய பையன் அவனது உடலை தூக்குறான் வாயில ரத்தம் கொப்பளிக்குது. அப்போ எந்த அளவுக்கு என் பிள்ளையை அடிச்சு கொடுமைப்படுத்திருக்காங்க. எனக்கு நியாயம் வேணும்'' என்றார் கண்ணீருடன்.