சேலத்தில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ‘நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்’ என்ற இப்பயிற்சி நவ. 26ம் தேதி தொடங்குகிறது. இது இரண்டு மாத கால பயிற்சி ஆகும்.
எஸ்.எஸ்.எல்.சி வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களும் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
பயிற்சிக் கட்டணம், விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் அனைத்தும் சேர்த்து மொத்தம் 4643 ரூபாய் செலுத்த வேண்டும். இதில் 500 ரூபாய் மதிப்பிலான தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பயிற்சியின் மொத்த கால அளவு 100 மணி நேரம். இவற்றில் 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் வழங்கப்படும். இப்பயிற்சியின் போது நகைக்கடன், வட்டி கணக்கிடுதல், ஹால் மார்க், நகை அடகு சட்டம், தரம், விலை மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து வகுப்புகள் நடத்தப்படும்.
இப்பயிற்சியை முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை 0427 2240944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.