Skip to main content

ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் இளைய சகோதரர் கைது!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Jayalalithaa's driver Kanagaraj's younger brother arrested

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் இளைய சகோதரரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில், கனகராஜின் பெயரில் உள்ள நிலத்தை உறவினர் ஒருவர் விலைக்கு கேட்பதாகக் கூறி கனகராஜின் மனைவி கலைவாணியை, அவரது இளைய சகோதரர் பழனிவேல் வரவழைத்திருக்கிறார். 

 

நிலம் விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. தான் அளித்த புகாரினால் தான் தனது அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டதாகவும், அவற்றைத் திரும்பப் பெறுமாறும் பழனிவேல் தன்னை மிரட்டியதாக கலைவாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

 

அதன் பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் பழனிவேலுவை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

கொடநாடு வழக்கு தொடர்பாக, கனகராஜின் அண்ணன் தனபால், ஏற்கனவே கைதான நிலையில், அவரது சகோதரர் பழனிவேலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாங்குநேரியில் மீண்டும் பரபரப்பு; அரசு பள்ளி சுவற்றில் சாதிய வாசகங்கள்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

 Caste slogans on government school walls resurgence in Nanguneri

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் மேலும் ஒரு சம்பவம், சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியுள்ளது. இந்தப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறான வாசகங்களை எழுதியிருந்தனர்.

 

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இது குறித்து நாங்குநேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், நாங்குநேரி துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, காவல் ஆய்வாளர் ஆதம் அலி மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு சுவற்றில் எழுதியிருந்த அவதூறு வாசகங்களை அழித்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் 4 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பிறகு அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 4 மாணவர்களையும் கைது செய்தனர். கைதான 4 மாணவர்களும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவற்றில் சாதிய வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறாக எழுதியிருந்த 4 மாணவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Next Story

பெரியார் வேடமிட்ட குழந்தைக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தது காவல்துறை!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Police have arrested a person, children related facebook post

 

பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக் கொன்று விட வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 

 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் வேடமணிந்து குழந்தை ஒன்று பங்கேற்றிருந்தது. இக்குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தையை அடித்துக் கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். அப்படி செய்தால் தான் மற்ற குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் அச்சம் வரும் என்றும் வெங்கடேஷ் குமார் பதிவிட்டிருந்தார். 

 

பீதியையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வெங்கடேஷ் குமார் மீது கயத்தாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், சாதி, மதம், இனம் தொடர்பான உணர்ச்சிகளைத் தூண்டுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அச்சமூட்டுதல், மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.