புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினசரி ஒரு சங்கில் பறிப்பு சம்பவம் நடந்த்தால் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். வெளியே செல்லவே ரொம்ப பயந்தனர். போலிசார் பைக்கில் சென்று சங்கிலி பறிக்கும் திருடர்களை பிடிக்க படாதபாடு பட்டனர். ஆனால் எந்த திருடனும் சிக்கவில்லை. அதன் பிறகு சில மாதங்கள் திருடர்கள் வேறு ஊருக்கு போய்விட்டார்கள் போல.. அதனால் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் இல்லை.
இந்த நிலையில் தான் மீண்டும் நேற்று சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது சங்கிலி பறிப்பு சம்பவங்கள் இதனால் மறுபடியும் அச்சத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளனர் பொதுமக்கள்.
சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா குரும்பூண்டி கிராம நிர்வாக அலவலர் ரேணுகாதேவி புதுக்கோட்டையில் இருந்து சென்ற போது ஆதனக்கோட்டை காவல் நிலையம் அருகில் தனது ஸ்கூட்டியில் சென்ற போது அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை இருவர் அறுத்துச் சென்று விட்டனர்.
ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை மாவட்டம், கே.ராசியமங்கலத்திலிருந்து - ஆலங்குடிக்கு மாலை 4.30 மணிக்கு தனது கணவர் வக்கீல் வினொத் ரொசார்யூ சாய் மிராண்டா வுடன் அவரது மனைவி ஜாஸ்(35) ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜாஸ் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க ஜெயினை பறித்து கொண்டு அவர்களை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் தடுமாறி கீழே விழுந்த ஜாஸ் படுகாயமடைந்து ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். இதே போல, புதுக்கோட்டை பெரியார் நகரை முத்துச்செல்வம் மனைவி சத்துணவு அமைப்பாளர் ராணி(35) அவரது சகோதரி கலா(33) ஆகிய இருவரும் இன்று காலை 11.00 மணிக்கு ஒரு ஸ்கூட்டியில் புத்தாம்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக புதுக்கோட்டையில் இருந்து சென்றபோது, பின்னால் டூவிலரில் வந்த 2 மர்ம நபர்கள் ராணி கழுத்தில் இருந்த ஜெயினை பறிக்க முயன்ற போது, ராணி ஜெயினை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டதால் ஜெயினை பறிக்க முடியாததால், மர்ம நபர்கள் ராணியின் டூவிலரை உதைத்து தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில், ராணியும், கலாவும் கீழே விழுந்து படுகாயமடைந்து. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, வெள்ளனூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெண்களிடம் ஜெயின் பறிக்கும் சம்பவம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அச்சத்திலும் போலிசார் தேடும் பணியிலும் உள்ளனர்.