
ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட கூட்டம் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தங்களின் வாழ்வாதாரத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இனி வரும் நாட்களில் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து அரசு சார்பில் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், 11 ஆம் தேதி நடக்கவிருந்த முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.