ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிபாளையம், லட்சுமிபுரம் பகுதி சேர்ந்தவர் மணிவண்ணன் (23). இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு கோவையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வார இறுதி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி மணிவண்ணன் ஊருக்கு வந்துள்ளார். அன்று காலை பாலக்கரை வாய்க்காலில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார். பின்னர் வாய்க்கால் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு துணிப்பையைக் கரையில் வைத்து விட்டு வாய்க்கால் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மணிவண்ணன் வாய்க்காலில் தவறி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் நீரில் மூழ்கினார்.
அப்போது அந்த வழியாக வந்த அதை ஊரைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் இதுகுறித்து மணிவண்ணன் பெற்றோரிடம் போனில் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி மணிவண்ணனை தேடினர்.கடந்த இரண்டு நாட்களாக இந்த பணி நடந்து வந்த நிலையில் நேற்று மாலை நல்லாம்பட்டி, பாப்பாத்தி தோட்டம் அருகே வாய்க்காலில் மணிவண்ணன் உடல் மிதந்து வந்ததை தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்து மணிவண்ணன் உடலை மீட்டனர்.
மணிவண்ணன் உடலைப் பார்த்துப் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.