Skip to main content

விஷம் குடித்த வாலிபரைக் காப்பாற்ற மருத்துவர் இல்லையா..? உறவினர்கள் போராட்டம்! 

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

 Isn't there a doctor to save youth  life ..? Relatives besiege struggle ...!


விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ளது மோட்சக் குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 26 வயது சுரேஷ். வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால், சுரேஷ் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர், மயங்கிக் கிடந்ததைக் கண்டு அவரை மீட்ட அவரது குடும்பத்தினர், அருகில் உள்ள சிறுவந்தாடு சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். 

 

அங்கு சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இளைஞரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லையா என்று அவரின் பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களது உறவினர்கள், மடுகரை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த வாலிபரை தனியார் வாகனம் மூலம், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

சிறுவந்தாடு சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த, பொது மக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து போலீசார் மீண்டும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

 

இது குறித்து அப்பகுதி வட்டார மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, வாலிபரை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது பணியில் இருந்த டாக்டர் அதே பகுதியில் உள்ள பயோமெட்ரிக் அறையில் சென்று பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். இதனால் இளைஞரை, சிகிச்சைக்கு அழைத்துவந்த அவரது உறவினர்கள், டாக்டர் சுகாதார நிலையத்தில் இல்லை என்று கூறுகின்றனர். வாலிபரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செவிலியர்கள் பணியில் இருந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்