ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்து மாத்திரைக்குப் பதிலாகப் பூச்சி மாத்திரையை 7 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் மேல் விஷாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த ஜெயப்பிரியா என்ற 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரேமா குமாரி என்ற செவிலியர் சத்து மாத்திரைகளை வழங்கி வந்துள்ளார். கொடுக்கப்பட்ட மாத்திரைகள் தீர்ந்துவிட்ட நிலையில் புதிய மாத்திரை வாங்க மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெயப்பிரியா வந்துள்ளார். அப்பொழுது அவர் கொண்டு வந்த பழைய மாத்திரை அட்டைகளைப் பார்த்த மற்றொரு செவிலியர் இது சத்து மாத்திரை இல்லை பூச்சி மாத்திரை எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரியாவும் அவரது உறவினர்களும் சேர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மகப்பேறு நிலையத்தின் வாசற்படியிலேயே அமர்ந்து கர்ப்பிணி பெண் ஜெயப்பிரியா போராட்டத்தில் ஈடுபட்டார். மாத்திரை அட்டையின் நிறம் ஒரே மாதிரியாக இருந்ததால் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறுதலாக மாத்திரையை கொடுத்த செவிலியர் பிரேமா குமாரி பணி நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு சத்து மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரை கொடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.