லடாக் பகுதியில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் சாதி மதம் பாராமால், கட்சி பாராமல் அனைவரும் பங்கேற்றிருக்க அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன் மட்டும் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் புறக்கணித்தார் எனும் செய்தி மாவட்டத்தைத் தாண்டி காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்திய சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் இந்திய ராணுவத்தினை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர் என ராணுவத் தரப்பு அறிவித்த நிலையில், வீரமரணமடைந்த 20 வீரர்களில் யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ள லே பகுதியில் ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா கடுக்கலூரைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பது தெரிய வந்த நிலையில், இறுதிச்சடங்கினை உறவினர்கள் ஒப்புதலுடன் கடுக்கலூரிலேயே நிறைவேற்றவுள்ளதாக அறிவித்தது மாவட்ட நிர்வாகம். வீர மரணமடைந்த பழனியின் உயிரற்ற உடல் நேற்றிரவு மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், இன்று அதிகாலை கடுக்கலூர் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக பழனியின் வைக்கப்பட்டிருக்க, தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஊரே திரண்டு அஞ்சலி செலுத்தியது.
இவ்வேளையில் அதிமுக தரப்பில் மா.செ.முனியசாமி, திமுக தரப்பில் மா.செ.முத்துராமலிங்கம், அமமுக தரப்பில் ஆனந்த், பாஜக தரப்பில் முருகன் உள்ளிட்ட பல கட்சிகளின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில், மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதியுள்ள நிலையில் திருவாடனை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் கருணாஸ், பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் சதர்ன பிரபாகர் மற்றும் தொகுதியின் நாடாளுமன்ற எம்பி நவாஸ்கனி உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். மற்ற இரு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்களும் கலந்து கொள்ளாத நிலையில் பூத உடலுக்கான இறுதிச்சடங்கினை வீர மரணமடைந்த பழனியின் மூத்த மகன் செய்ய, முப்படை வீரர்களின் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாவட்டத்திலுள்ள ஏனைய ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களிருவருக்கும் தேசிய பற்றென்பதே கிடையாது என்கின்ற ரீதியில் வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவிய நிலையில், நல்லடக்கம் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் கடந்த நிலையில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் மலேசியா பாண்டியன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி, பழனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எஸ்கேப்பானார். இறுதி வரைக்கும் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது மக்கள் மத்தியில், வாட்ஸ் அப்பில் வசைப்பாடும் பொருளாக இருந்து வருகின்றது.
இது குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டனிடம் கேட்ட பொழுது, "எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் தான் வரவில்லை. வேண்டுமென்றே புறக்கணித்தேன் என்பது தவறான செய்தி. ராணுவ வீரரின் தொண்டு அளப்பரியது. அதைப் போய்ப் புறக்கணிப்பேனா..? உடல் நிலை சரியானதும் அவரது இல்லத்திற்குச் சென்று தேவையான நிதியுதவி வழங்கி, அவர்கள் குடும்பத்தை மேம்படுத்துவதே என் எண்ணம்." என்றார் அவர்.