இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான தொழிலதிபர் சாரதிக்கு சொந்தமான 25 இடங்களில் மார்ச் 2ஆம் தேதி காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடத்திவருகிறது. ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரம், சென்னையில் சாரதிக்கு சொந்தமான இடங்களில் இந்த ரெய்டுகள் நடந்துவருகின்றன.
யார் இந்த சாரதி?
ஆற்காட்டில் சிமெண்ட் விற்பனை செய்து கொண்டிருந்தார். அதிமுகவில் வர்த்தகர் அணி மா.செவாக இருந்தார். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இவரது வளர்ச்சி படுவேகமானது. தனியார் சிமெண்ட் கம்பெனியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட டீலர், திமிறியில் கல்குவாரி, எம்-சான்ட் குவாரி என இவரின் பொருளாதார வளர்ச்சி பிரமாண்டமானது. அவரின் பெயரிலும், அவரின் பினாமிகள் பெயரிலும் 100 டிப்பர் லாரிகள் ஓடுகின்றன. தரமான எம்.சான்ட் விற்பனையில் காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை வரை கோலோச்சுகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆற்காடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் என முடிவாகியிருந்தது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமகவுக்கு அந்ததொகுதி ஒதுக்கப்பட்டதால் சாரதிக்கான வாய்ப்பு பறி போனது. திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே திமுகவில் இணைந்தார் சாரதி. இணைந்த வேகத்தில் அமைச்சரின் நம்பிக்குரியவராக மாறியது பலருக்கும் அதிர்ச்சி. கடந்த வாரம் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி தனது பலத்தைக்காட்டினார்.
ஆற்காடு நகராட்சி, கலவை, திமிறி, விளாப்பாக்கம் பேரூராட்சிகளில் திமுகவில் யாருக்கு சீட், வெற்றிக்கு செலவு செய்வது என முக்கிய பங்காற்றினார். தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் சிலரை திமுகவுக்கு கொண்டுவர மறைமுக பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தார். கவுன்சிலர்களுக்கு பட்டுவாடா செய்யும் வேலையும் அமைச்சர் சாரதியிடம் ஒப்படைத்திருந்தார் என்கிறார்கள் திமுகவினரே. தற்போது சாரதி வருமானவரித்துறையிடம் சிக்கியிருப்பது ஆளும்கட்சியான திமுகவில் ஒரு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.