புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பல கும்பல் வழக்கமாக வைத்திருக்கிறது. அடிக்கடி இப்படியான சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த மாதம் 25 ந் தேதி விராலிமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இரு குழந்தைகளுக்கு தாயான ஒரு இளம் பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் இயந்திர இயக்குநராக வேலை செய்துவிட்டு இரவு 11.30 க்கு கம்பெனி வாகனத்தில் ஊரின் எல்லையில் மண் சாலையில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த 4 பேர் அந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு, மூக்குத்தி, சங்கிலி உள்ளிட்ட தங்க நகைகளையும் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன் கணவருக்கு தகவல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று வந்த விராலிமலை போலீசார் வழிப்பறக்கு மட்டும் வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், ஹேமராஜ், நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இது குறித்து தகவல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறும் போது... பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். ஆனால் நகை பறித்துச் சென்றது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனை பாலியல் கொடுமை நடந்துள்ளது என்று சான்றிதழ் அளித்தும் ஏனோ போலிசார் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதேபோல பல சம்பவங்கள் தொடர்ந்து மறைக்கப்படுகிறது. இதனால் குற்றவாளிகள் தொடர்ந்து தப்பி வருவதுடன் துணிச்சலுடன் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நடவடிக்கை இல்லாத நிலையில் உறவினர்கள் திரண்டு காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றனர்.